Listen 3D Quality

ஞாயிறு, 20 மே, 2012

நானும் என் குப்பைத்தொட்டியும்....


விசித்திர உரு
வீசிடும் துர்நாற்றம்
யார் நீ ?

உன்னில் உதிர்ந்த
எட்ச மிட்சங்களின் குடில்....
உன் வீட்டு குப்பைத்தொட்டி நான்....
உயிர் கொண்ட நீவீர்
குப்பைத்தொட்டி ஆனதினால்
நான் கூட ஒருநாள்
உயிர்கொள்ள ஆசை கொண்டேன்....

உயிர் கொண்டு வந்ததின்
உள்நோக்கம் என்ன?

உள்ள சுமை உள்ளச்சுமை
கொட்டிடுவேன் உன்னோடு
உலைச்சூடு பொறுத்திடு...
உங்கள் மயிர் பிடுங்கும்
களிம்பு கூட கொலுவில்
நானோ விழிகள் துளைக்காத
ஏதோ ஒரு மூலையில்....
சூழல் சுற்றமாக
எனை அழுக்காக்கினேன்
உண்மை நேயத்தோடு...
நீங்களோ
உண்மை போராளிகளை தூக்கி
என்னிலே போட்டீர்கள்...
பொறுக்க இயலாது
போர்க்கொடி தூக்கிவந்தேன்...


இப்போது புரிகிறது
எந்த இயக்கத்தின் பிரதிநிதி நீ ??


நன்கு கேட்டாய்
முட்டாள்தனத்தின்
முன்னுதாரணமாய்....
உங்கள் முதுகெலும்புகள்
முதலீடுகள் ஆகின்றன
என உண்மை சொன்னால்
நான் போராளி....
உங்கள் பரிணாமம்
பரிமாணம் அடையவில்லை
விளக்கி சொன்னால்
நான் விதிவிலக்கு...
கட்சி கொடிகளுக்கு
கோவணம் தொலைத்தீர்
எடுத்து சொன்னால்
நான் தேசத்துரோகி...
இளைப்பாறுதல் இன்றி
இடுகாட்டுகுழிகளில்
இனமொன்று நிறைகிறது
எடுத்து சொன்னால்
இறையாண்மை கொன்றவன்...
வாழிய ஜனநாயகம்....


புரிந்ததெனக்கு....
குப்பைத்தொட்டிகள் புனிதமாகிறது
மனிதம் குப்பையாகிறது.....

அருண்குமார் சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக