பொய் வாசம்
அவர்கள் இருவருமே
தனித்தனியாக
அழைத்தார்கள்
கேட்டிருக்க
வேண்டியதில்லை
ஆனாலும்
கேட்டார்கள்
சொல்லியிருக்க
வேண்டியதில்லை
ஆனாலும்
சொன்னேன்
கேட்கவேண்டுமே எனக்
கேட்டார்கள்
சொல்லவேண்டுமே எனச்
சொன்னேன்
உண்மையா பொய்யாவென
ஆராயும்
அவசியம்
அவர்களுக்கில்லை
உண்மையைக்
கொன்றேன்
பிணமாய்
உயிர்ந்தெழுந்தது பொய்
ஊர்ந்து வந்த
பொய்
ஓரமாய் பாய்
விரித்தது மனதில்
நேரம் நகர
நெருங்கிப் படுத்த
பொய்யின் கனம்
பிணமாய் கனத்தது!
எட்டிப்பார்க்க
மயக்கம் சூடியது
ஏராளமாய்க்கிடந்த
பொய்களின் வீச்சத்தில்
பிணமாய் அலையும்
பொய்களைக் கொல்ல
பிறிதொரு ஆயுதம்
தயாரிக்க வேண்டும்.
-
பூக்கள் பூக்கும் தருணம்
நீயும் படிக்கவில்லை
நானும்
படிக்கவில்லை
விரல் நுனி
உரசலில்
வேதியல் மாற்றம்
நிகழுமென்பதை
நோக்கும் நொடியிலெல்லாம்
புது மலராய் பூத்து நிற்கிறாய்
மடி சாய்கையில் மட்டும்
மல்லிகைச் சரமாய் வாடுகிறாய்…
புது மலராய் பூத்து நிற்கிறாய்
மடி சாய்கையில் மட்டும்
மல்லிகைச் சரமாய் வாடுகிறாய்…
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உன்
இதழ்களில்
வரிகளைத் தருகிறாய்
விழியசைவில்…
வரிகளைத் தருகிறாய்
விழியசைவில்…
அன்பு ஆர்பரிக்கும்
தருணங்களில்
அணையிலிட்டுத்
தேக்கி
திகட்டிய அன்பைக்
கொஞ்சம்
ஆவியாக்கி ஊடல்
பூணுகிறோம்
அன்பு கனத்த கரு
மேகம்
கிழிந்து
பொழிகிறது
புத்தம் புது
அன்பு
புதுவேகம்
பூணுகிறது
கற்ற மொழிகளெல்லாம்
தீர்ந்து
கரைந்த மௌனப்
பொழுதில்
உடலும் ஒரு மொழி
என்பதை
உன்னை வாசிக்கையில்
அறிகிறேன்
மௌனங்களின் வரிகளை
வாசிக்கவும்
கற்பனையில் வாசனையை
நுகரவும்
கனவுகளில்
வர்ணங்களைக் காணவும்
கற்கிறேன் காற்றாய்
உனை சுவாசிக்கையில்
-
ஆதலினால்....
தடுமனில் தவித்தவனிடம்
ஆவி பிடித்தாயா என்றாள்
அருகில் சூடாய் மூச்சுவிட்டபடியே!
ஆவி பிடித்தாயா என்றாள்
அருகில் சூடாய் மூச்சுவிட்டபடியே!
-
மழைக்கு
ஒதுங்க வந்தவள்
உருவாக்கிவிட்டுப் போகிறாள்
ஒரு
பெரும் புயலை!
-
விதைகளை
பூக்களாக
மாற்றும் இரசவாதத்தை
அவள்
மட்டுமே அறிந்திருக்கிறாள்!
-
மௌனங்கள் நிரம்பிய காதலில்
எழுதவும் வேண்டுமா
கடன் வாங்கி ஒரு கவிதையை!
-
பூக்கள் உரசி
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!
-
படத்தில் முத்தம்
பதிக்கவா
எனக்கேட்டாள்,
வேண்டாம்
எறும்பு
மொய்க்கும் என்றேன்!
-
ரயிலடிகள்
டிக்கெட்
எடுத்திட்டியா
டிபன்
எடுத்திட்டியா
தண்ணி
எடுத்திட்டியா
தலகாணி
எடுத்திட்டியா
பூட்டு
செயின் எடுத்திட்டியா
போர்வை
எடுத்திட்டியா
போன்
எடுத்திட்டியா
ஐபாட்
எடுத்திட்டியா…
அலாரம்
வெச்சுட்டியா….
கேள்விகளால் நிரம்பி
வழிகின்றன
தொலைதூரம்
செல்லவிருக்கும்
தொடர்வண்டியின்
சன்னலோரங்கள்
பார்த்துப் பத்திரமா
போ
யாருகிட்டேயும் எதும்
வாங்காதே
மறக்காம
போன் பண்ணு
நல்லா
சாப்பிடு
ரொம்ப
அலையாதே
மனித
சமுத்திரத்தின்
காலடியில்
நசுங்கும்
நடைமேடை
விளிம்புகள்
அக்கறையிலும்
அன்பிலும்
மிதக்கின்றன
பிரியும் நேரம்
நெருங்க
விடுபடப்போகும்
விரல்களினூடே
நிலநடுக்கத்திற்கு
நிகராக
நிகழும்
நடுக்கத்தை
ஒவ்வொரு
சன்னல் கம்பிகளும்
தன்மேல்
அப்பிக்கொள்கின்றன…
ஏக்கம்
துக்கம் நனைத்த
ஏற்ற
இறக்கம் நிறைந்த
வார்த்தைகளை
சுமக்கமுடியாமல்
சுமக்கும்
சன்னல்
விளிம்புகள்
ஓடும்
தடமெங்கும்
உதிர்த்துவிட்டுக்
கடக்கின்றன…
அடுத்த
நிலையத்தில்
அன்பாய்
பற்றும் கைகளிலும்
பாசம்
இளகும் விழிகளிலும்
இன்னுமொருமுறை
ஏந்திக்கொள்ளலாமென!

--
நன்றி
திண்ணை
.
போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை
மாயப்போதை தேடும்
மூளையோடும்
எச்சிலூறும்
நாவோடும்
சில்லறைகளைப்
பொறுக்கி
போதை
பதுங்கிக்கிடக்கும் குடுவையை
கையகப்படுத்துகிறான்
குடிமகன்.
அழுக்கடைந்த
குடிப்பக மூலையில்
ஆலமரக்கிளையொன்று
சிந்தும் நிழலில்
கோணலாய் நிற்கும்
மேசையில்
காக்கையொன்று
நேற்றும் எச்சமிட்டிருந்தது.
முதலிரவுக்கு வந்த
மனைவியைப்போல்
குறுகுறுப்பாய்
குடுவையைக் கையாள
அடைபட்டுக்கிடந்த
அவனுக்கான அமிர்தம்
விடுபட்டு மெல்லச்
சிரிக்கிறது
நடுங்கும்
விரல்களோடு குவளையில் சரித்து
இனிப்பூட்டிய
குளிர்பானத்தையோ
வாயு நிரம்பிய
சோடாவையோ
பிளாஸ்டிக் பை
தண்ணீரையோ பீய்சிக்கலந்து
ஒரு புணர்ச்சியின்
தொடக்கம் போல்
தன்
அனுபவத்துக்கேற்றார்போல் அருந்துகிறான்.
நாவு கடக்கும்
மதுவின் கடுமையை
காரக்கடலையிலோ
ஊறுகாயிலோ,
திட்டிய மனைவியின்
வார்த்தைகளிலோ,
தன்னை ஒதுக்கிய
சகமனித நினைப்பிலோ
தொட்டும்தொடாமலும்
நீவிவிடுகிறான்
துளைத்தூடுருவும்
கள்ள போதை
மெல்ல மெல்ல அவனை
மேதையாக்கி
வன்மப் போர்வையை
உதறிப்போட்டு
அன்புக் குடுவையின்
மூடியை திறந்துவைத்து
வார்த்தைகளுக்கு
பிரசவம் பார்க்கிறது
வெற்றிடத்தைக்
குடித்த குடுவை சிரிக்க
போதையை ஊட்டிய
திரவம் சிரிக்க
போதை தளும்பும்
அக்கம்பக்கமும் சிரிக்க
ஓங்காரமாய் அவனும்
சிரிக்கின்றான்
உலகமும் அவனைப்
பார்த்து சிரிக்கின்றது!
போதையின் கனம்
தாங்காத
பிறிதொரு குடுவை
தன்னை
எவர் விடுவிப்பதென
ஏக்கமாயிருக்கிறது
ஆனாலும் அது
அறியும்,
இன்றோ, நாளையோ
இவனோ, இன்னொருவரோ
விடுவித்துவிடுவார்களென்று
-0-
நன்றி திண்ணை
-0-
நன்றி திண்ணை
உதடுகளின் போர்க்களம்
எதைக்கொண்டும்
நிரப்பிட
இயலுவதில்லை
முத்தம் பதிந்(த்)த
சுவடு(க்)களை!
(..)
நெருப்பைத்
தூண்டிடும்
முரண்
முத்த ஈரத்தில்
மட்டுமே!
(..)
இறைவனும் வெட்கிக்
கிறங்கி
இமை
மூடுகிறான்
முத்தமிடும்
கணங்களில்!
(..)
உமிழ்நீரும்
அமுதமாய்
உருமாறும்
இரசவாதம்
முத்தங்களில்
மட்டுமே!
(..)
நெருப்பையும்
குளிரையும்
உயிருக்குள் ஒரு சேர
ஏற்ற வல்லது ஒற்றை
முத்தம்
(..)
வெற்றியும்
தோல்வியுமில்லா
உதடுகளின்
போர்க்களத்தில்
வெல்கிறது
முத்தம்!
(..)
பாசாங்குப் பசி
மண்டப முகப்பில்
கும்பிடுகளை உதிர்த்து
மணமேடை நிழற்பட
பதிவு வரிசையைத் தவிர்த்து
பசியாத வயிற்றுக்கு
பந்தியில் இடம் பிடித்தேன்...
சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட
இடது பக்கயிருக்கைக் கிழவியின்
இலை இளைத்துக்கிடந்தது
அவர் தேகம் போலவே...
வலதுகையால் பிட்டதை
பாசாங்காய் வாய் கொறிக்க
எவரும் அறியா சூட்சுமத்துடன்
இடது கை இழுத்து
புதைத்துக்கொண்டிருந்தது மடியில்...
பசிக்காத வயிற்றுக்கு
பாசாங்காய் ருசித்துண்ணும் எனக்குப்
பரிமாறியவர் பாட்டியின்
இளைத்துக்கிடந்த இலையையும்
இட்டு நிரப்பிப்போனார்...
முதுமை முடக்கிய கணவனோ
புத்திசுவாதீனமில்லா மகனோ
தீரா நோயில் விழுந்த மகளோ!
பெற்றவரை இழந்த பேரன் பேத்தியோ!
உள்ளம்பேதலித்த உடன்பிறப்போ
உயிர்வாடும் நெருங்கிய உறவோவென
எவரின் பசியாற்றப்போகிறதோ
இந்த மடியின் கனம்...
அந்தப் பாழும் கிழவியின்
சுருங்கிய வயிற்றையோ,
பசியோசை வழியும்
அந்தவீட்டின்
இன்னொரு வயிற்றையோ
இந்தப் பாசாங்குப் பசிதீர்க்கட்டுமே
தற்காலிகமாகவேணும்!
~
நன்றி திண்ணை
வருடப்படாத வடுக்கள்
அலையலையாய் குளிர்வந்து
அணைக்கும் பின்மாலைப்பொழுதில்
எதிர்பாராச் சந்திப்பெனும் பரிசால்
இனம்புரியா இன்பத்தை ஊட்டுகின்றாய்
எதிரெதிரே நிற்கும்
இன்பத்தை
இருவராலும் நம்பமுடியவில்லை
ஆச்சரியத்தில் புருவம் சுருக்கி
அழகழகாய் யோசிக்கின்றாய்
நீ!
இந்த உலகத்தில் இன்றோடு பேச்சு
வற்றிப்போய்விடும்
என்பதுபோலே
பேசிப்பேசி வார்த்தைகளால்
எனக்குள் உன்னை
ஊட்டுகின்றாய்
உருண்டு
மருண்டு மிரட்டும்
உன்
விழிகள் இரண்டால்
எல்லா
வார்த்தைகளுக்கும் வடிவாய்
வர்ணம்
தீட்டியனுப்புகின்றாய்
அயர்ச்சியில் மெல்லத்தலை சாய்த்து
புறங்கழுத்து நீவும் விரல்களில்
மயக்கும் ஒரு மயிலின்
நடனத்தை
நிகழ்த்துகின்றாய்
அழகாய் இழுத்துமூடும்
இமைச்
செவுள்களின் அழகில்
ஒரு குழந்தையின் தூக்கத்தை
எனக்குள் தூளியாட்டுகின்றாய்
எல்லாம்
விசாரித்து
எல்லாம்
பகிர்ந்தபோதும்
பிரிந்த
நாட்களின் வடுக்களை
மிகக்
கவனமாய் தவிர்க்கின்றோம்
விதி
ஒதுக்கிய காலத்தின்
எல்லாச்சொட்டுகளும்
தீர்ந்துபோய்
கடைசிச்சொட்டு மெல்லச்
சொட்ட
ஓடும் ரத்தம் ஒருகணம் உறைகின்றது
இதயம் படபடக்க
மனது வெடவெடக்க
நதியின் சுழித்த நகர்வு போலே
பின்வாங்கும் அலைபோலே
கையசைத்துப் போகும் முன்
போகவா எனக் கேட்கிறாய்
போகவேண்டாம் என நான்
சொல்வதற்காகவே!
~
பொருத்தியும் பொருத்தாமலும்
விளையாட்டும்
வேடிக்கையுமாய்
சாலை
கடக்கமுயலும்
பிள்ளையை
வெடுக்கென
கொத்தாய்
உச்சிமுடி
பற்றியிழுத்துப்போகும்
அம்மா!
சராசரிக்கும்
குறைவான
புத்தியோடு
சளசளவெனப்பேசும்
ஒற்றை
மகனுக்கு
படிப்பு
பணி
தொழிலென
எதையும்
பதியனிடமுடியாமல்
தவிக்கும்
அப்பா!
இல்லற
வெம்மையில்
வாசமிழந்த
மலரில்
நெருப்புத்துண்டங்களை தூண்டில்முள்ளாய் வீசும்
குறைந்த
வயதுடைய
சகஊழியனின்
சல்லாபமோகத்தில்
வெதும்பும்
தோழி!
வரும்
மாதவாடகை
கரண்ட்பில்
அக்கம்பக்கம்
புரட்டிய
கைமாத்துக்கு
கை
பிசையும்
வாழ்ந்துகெட்டோர்
வாரிசான
மத்திம
வயதையெட்டும்
தோழன்!
ஆயிரம்
ரூபா
முதியோர்
பென்சனில்
ஆறுக்கு
எட்டு
ஒண்டுக்குடித்தனத்து
கக்கூஸ்
வரிசையில்
காத்துக்கிடக்கும்
”காரையூட்டாயா”
கிழவி!
மனைவி
மரித்த
பொழுதோடு
மரியாதையை
சோத்துக்குத்
தொலைத்து
விரிசல்விட்ட
மூக்குக்கண்ணாடியை
பிசுபிசுத்த
நூலில்
கோர்த்துக்கட்டிய
கிழவன்!
எல்லாம்
எளிதாய்க் கரைந்துபோகிறது
இயலாமையில்
இயல்பு எனவும்
என்னை நான்
எதிலும் பொருத்தியும்
பொருத்தாமலும் கடந்து போவதிலும்!
~
நன்றி திண்ணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக