Listen 3D Quality

திங்கள், 30 ஏப்ரல், 2012

மழை நாட்கள்



மழை நாட்கள்




அந்தப் பருவத்தின் 
முதல் மழைத்துளி
சுமந்துவரும் வாசம்
அலாதியானது!

தாகத்தில் தவிக்கும்
மண்மீது மோதும்
நீர்த்துளி எழுப்புகிறது
மோகத்தின் வாசத்தை!

அன்றொருநாள்
மழையில் நனையாமலிருக்க
ஒதுங்கிய தனிமையில்
பற்றிய கைகளினூடே
பார்த்த விழிகளினூடே
படர்ந்த காதல்
மெலிதாய்க் கிளர்ந்து
கலந்திடத் துடிக்கிறது
முதல் மழைத்துளியின்
மோக வாசனையில்

உறங்கிக்கிடக்கும் நினைவுகளை
கிளர்த்திவிட்டுப் போவதில்
ஒருபோதும் தோற்பதில்லை
மழை நாட்கள்!

~

கூடிக்களிக்கும் தனிமை




கழுத்தைக் கவ்விக்கொண்டு
தொட்டிலாடுகிறது
மனிதர்களற்ற வீட்டில்
உடனுறங்கும் தனிமை…

இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள்
முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து
நெளிந்து நெளிந்து நகர்கிறது
ஒரு மண்புழு போல

நள்ளிரவு விழிப்பில்
புத்திக்கு முன் துயிலெழுந்து
இடவலமாய்த் துழாவும் கைகளில்
தாவி அப்பிக்கொள்கிறது

சன்னலோர மரக்கிளைகளில்
சிதறும் பறவைக் கொஞ்சல்களும்
வெளிச்சக் கீற்றுகளையும்
தட்டியெழுப்ப அனுமதிக்கிறது
நேரம் தவறிய தேநீர் சிற்றுண்டி
பசிக்கு கொஞ்சம் பகல் உறக்கம்
தொட்டுக்கொள்ள ஒரு முட்டை
இரு ரொட்டித்துண்டுகளுமென
எதையும் கலைத்துப்போட்டுக்கொள்ளும்
ஏகாந்த சௌகரியத்தை ஊட்டுகிறது
இறுகப்பூட்டிய யாழின் நரம்புகளாய்
அதிரும் தனிமையை
மீட்ட மீட்ட இதமாய் தெறிக்கிறது
அன்றைய தனிமையின் தனித்துவ இசை

தனிமையை அனுபவித்து
திளைத்துக் கொண்டாடி களைத்து
தனிமையை உற்றுப்பார்க்கையில்
குழுவாய் கூடிச்சிரிக்கிறது தனிமை!

~
நன்றி திண்ணை

பெருநதிப் பயணம்





ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று
பள்ளங்களில் பதுங்கி நிரம்பி
பாறைகளில் தாவிப்படிந்து
சரிந்து விழுந்து குதித்து வழிந்து

தன்னைத் தாய்மையாக்கி
தன்னையே ஈன்றெடுத்து
தன்னுள்ளே தன்னைச் சலித்து
தன்னைத் தூய்மையாக்கி

தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து
நிரம்பும் அம்மணங்களைக் கழுவி
நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து

தன் கனத்தை தானே தாங்கி
தன் குணத்தை எங்கும் விதைத்து
தன் மணத்தை திசைகளில் தூவி

நனைக்கும் கால்களிலும் கைகளிலும்
உற்சாகத்தை ஒட்டிவிட்டு

தத்தித்தாவி தாளம் போட்டு
நடனமாடி நளினமாயோடுது பெருநதி
ஒரு துளியும் சோர்வின்றி



நன்றி: திண்ணை

~

சொர்க்கமும் நரகமும்

நீள் பயணங்களில்
நெரியும் சனத்திரளில்
பாரம் தாங்கமுடியாமலோ
பத்திரமாய் உறங்கட்டுமெனவோ

நம் மடிமீது வலிய
இறுத்தப்படும் குழந்தையின்
எப்போதாவது இதமாய்
உந்தும் பிஞ்சுப்பாதம்
இதழ்வழியே தவழ்ந்து
ஈரமூட்டும் எச்சிலமுதம்
கனவுகளில் தேவதைகள்
கூட்டிடும் குறுஞ்சிரிப்பென
என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும்

இறுதியாய் எப்போது
சிறுநீர் கழித்திருக்குமென
நச்சரிக்கும் சிந்தனை
நரகத்திலிருந்து
தப்பிக்க முடிவதில்லை
பல நேரங்களில்!

-0-
04 செப் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை. நன்றி திண்ணை!

தீர்ந்துபோகும் உலகம்



துணி மாட்டும் கவ்விகளில்
முனைப்பாய் தன் நேரத்தை
விதைக்கிறது அந்தக் குழந்தை
ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து
வீடு கட்டி மகிழுந்து ஓட்டி
அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி
எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து
தம்பிப் பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து
பறவைக்கு இறக்கை பொருத்தியென….

நிமிடங்களுக்கு நிமிடம்
மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது
அதற்கானதொரு அழகிய உலகத்தில்…

அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு
விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும்
உலரும் துணி உதிராமல் இருக்க
அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்

-0-

21ஆகஸ்ட் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை. நன்றி திண்ணை!

.


இழப்பு…
அந்த நிமிடத்து மகிழ்ச்சியை
சேமிக்க ஆசை கொள்கிறோம்
அடுத்த நிமிடங்களில்

இடமாறு…
அங்கேயே இருக்கும் காற்றை
இடம்பெயர்த்து தருகிறது
காற்றாடி

இயல்பு…
வைக்கும்போதிருக்கும் விருப்பம்
எழுப்பும்போது இருப்பதில்லை
அலாரங்களின் மேல்

இலக்கு…
தெருச்சண்டை வேடிக்கைகளில்
எப்போதும் இலக்குகள் ஒன்றுதான்
சண்டையின் உச்சம்

-0-

தூரிகையும் சித்திரமும் என் இதயமும்




எதிர்பாராத தருணத்தில்
மேகத்திற்குப் பிரசவம் நடந்தது
அந்த ரயில் நிலையத்தில்

தெறிக்கும் சாரல்களில் ஆசிர்வதிக்கப்பட்டு
ஒரு சித்திரமும் தூரிகையும்
கைகள் பற்றி நின்றிருந்தன

தாமதமாய் வந்த ரயில் வண்டி
கொட்டும் பெரு மழைக்குள்
பெருமூச்சுவிட்டபடி நீண்டு கிடந்தது

தூரிகையிடம் விடைபெற்று
சித்திரம் மட்டும் ஓடி ஏறியது
ஒரு முன்பதிவு பெட்டியில்!

சாரல் தெறிக்கும் படியில் நின்று
மழைச்சரங்களை ஊடுருவி
அவனோடு விழிகளால் கதைத்துக்கிடந்தது

ஆயிரம் அபிநயங்கள் பேசிய
அவள் விழிக் கத்திக்கு முன்
அவன் விழிகள் உயிரற்றுக் கிடந்தன

கண்ணைத்துடை என்ற சாடையோடு
கைப்பையை தலைக்குப்பிடித்து
அவனருகே ஓடிவந்து ஏதோ கிசுகிசுத்தாள்
வர்ணத்தோடு நிமிர்ந்து மலர்ந்தது தூரிகை

திரும்பியவள் படியில் பாதம் பதிக்கும்முன்
மழைத்துளிகள் சொட்டச் சொட்ட
ஒரு முறை திரும்பி புன்னகையை உதிர்த்தாள்
கண்ட உயிர்களுக்குள் எல்லாம் பூ பூத்தது

மழையும் விடவில்லை வண்டியும் நகரவில்லை
புருவங்களை அசைத்து விழிகளால் கதைத்தவள்
மெதுவாய் விழி மூடி அவனை அருகே அழைத்தாள்

புத்துயிர்கொண்ட அந்தத் தூரிகையையும்
அழகாய் தீட்டியிருக்கும் அந்தச் சித்திரத்தின்
அருகில் வண்ணக்குழம்போடு ஆசையாய் ஓடியது

அவன் கைக்குள் கையைப் பொருத்தி
ஏதேதோ காதில் கிசுகிசுத்தாள்
அவன் விரல்களை அழுத்திப் பிசைந்தாள்

கதவோரம் ஒடுங்கி நின்றவள்
விழிமூடி இழுத்த சுவாசத்தில்
அவனைப்பிடுங்கி அவளுக்குள் நட்டுக்கொண்டாள்

வண்டி ஒரு குலுங்கலோடு நகர முற்பட
அவன் முதுகில் அழுந்தக் கை பதித்து
பிரசவம் போல் வெளியே தள்ளிவிட்டாள்….

தூரிகை மழையில் கரைந்து போனது
சித்திரம் உள்ளே காணாமல் போனது
நகரும் சக்கரங்களில் என் இதயம் கசங்கியது
கை நீட்டி ஒரு மழைத்துளியை கையகப்படுத்தி
விரல் மூடி மெதுவாய் விரித்துப் பார்த்தேன்
மொட்டாய் சிரித்த மழைத்துளி கண்சிமிட்டி
காதலித்துப்பார் என்றது கிசுகிசுப்பாய்

-0-

உண்மை ஒன்றுதான்

அக்கணத்தில் பிறப்பது செய்தி
காலம் தாழ்ந்து கசிவது ரகசியம்
அடையாளக் குறிகள் 
அழகாய்ச் சுட்டினாலும்
உண்மை என்னவோ ஒன்றுதான்

-0-

சில அழைப்பிதழ்களைக் காணும்போது
கண்ணினூடாக மனதில் படிகிறது
பலருக்குள் அடர்த்தியாய்
படிந்துகிடக்கும் சாதிச் சாயம்

-0-

நீரில் எப்போதும்
மிகக் கனமானதும்
மிகச் சூடானதும்
கண்ணீர்தான்
-0-

அலங்காரம் அற்றுப் பிறக்கும் கவிதை
வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் சூடுவதில்
தன்னைத் தொலைத்துவிடுகிறது

-0-


ஒரு எழவின் கதை


முப்பது வருடங்களாகப்பிரிந்த மனைவி
திருமணத்திற்குப் பிறகு
ஒட்டு றவு அற்றுப்போன மகள்
மகன் சாவுக்குபின் பேத்திகளைக்கூட
அண்டவிடாத மருமகள் என
உறவுகளுக்காய்த் தவித்தவன்
ஒருநாள் உறக்கத்திலிருந்து
எழ மறந்து போனான்

”எழவு காங்கனும்” எனும் மையப்புள்ளிக்கு
திசைகளிலிருந்து திரும்பிய மூவருக்கும்
மறந்துபோன அவன் வாசத்திற்குப் பதில்
மரணம் தின்ற எச்சத்தின் வாசமும்
அடக்கம் பண்ணிக் காரியம் செய்ய
காசுக்கு எங்கே போவதென்ற திகைப்பும்
அடர்த்தியாய் அடித்தது  
 
இறந்தவனின் தலையணைக்குக் கீழே
இருந்த எட்டாயிரம் ரூபாய்க் காசும்
இரும்புப்பெட்டிக்குள் கிடந்த பத்திரங்களும்
அவனை எந்தப்பஞ்சாயத்துக்கும் இழுக்காமல்
நல்லபடியாய் நகர்த்திப்போன
மூன்றாம் நாள் அண்டம் பொறுக்கி
ஆற்றில் விட்டு கூரை மேல் சோறு போட்டு
பத்திரங்களின் கனத்தை பங்கு பிரித்ததில் 
தலைக்கு லட்சத்துக்குமேல் வந்தது


உறவுகள் ஒன்று கூடிப் போட்ட
மறுவிரால் விருந்தில் கோழிக்குழம்பை
சோற்றில் பிசைந்த மனைவியின்
வாயிலிருந்து நழுவியது ”எங்கூட்டுக்காரன்”
வெத்தலை மடித்துக்கொண்டே வாய்க்குள்
மென்று கொண்டிருந்தாள் மகள் “எங்கப்பன்”
யாரிடமோ அலைபேசியில் கதை
பேசும் மருமகள் உதிர்த்தாள் ”எங்க மாமனாரு”

காமத்திற்கும் நம்பிக்கையின்மைக்கும்
இடையே உரசி உரசிக் கிழியும் தருவாயில்
தூக்கியெறியப்பட்ட ஆணுறை போல்
உறவுகளில் நசுங்கிக்கிடந்த அவனின் ஆவி
அருகிலிருந்த ஊஞ்ச மரத்தின்
ஒரு கிளை நுனியில் ஆடிக்கொண்டிருந்தது

-0-

ஒன்னு ரெண்டு மூனு



1.
எல்லாக் காதல் கவிதைகளிலும்
யாரோ ஒருத்தியின் வாசம்
படிந்துதான் கிடக்கிறது
சிலசமயம் அவள் அறிந்து
பலசமயம் அறியாமல்


2.
காத்திருத்தலின் 
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
காத்திருத்தலில் மட்டுமே
அறிய முடிகிறது

3.
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் படைப்புகளிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறது
உடையணிவிப்பதோ
உடைகிழிப்பதோ
பூச்சூடி முகப்பூச்சிடுவதோ
சிதைத்துக்காட்டுவதோ
மட்டும்தான் படைப்பாளி

-0-

ஈர முத்தங்களோடு



                   ஒவ்வொரு வருகையிலும்
                   உன்னை என் கண்களினூடாக
                   உயிர்க்குடுவை முழுதும்
                   வழிந்தோடும் வரை
                   வண்ணச்சொட்டுகளால்
                   நிரப்பிப் போகிறாய்

 
                   நிரப்ப மறந்த
                   தினங்களில்
                   சுற்ற மறுக்கும்
                   சுவர்க்கடிகார முட்கள்
                   இடம் பெயர்ந்து
                   ஒரு துக்கத்தின்
                   குறிப்புரையை
                   நாட்காட்டிக் காகிதத்தில்
                   செதுக்கிவிட்டுச்செல்கிறது

                   பிடிபடாமல் சட்டெனபிடிபட்ட
                   கவிதை வரிகளாய்
                   சூரியகதிர்கள் திருட மறந்த
                   இளம் பனித்துளியாய்
                   காற்றில் கலந்துவந்து
                   கட்டியணைக்கும் பூ வாசமாய்
                   ஒவ்வொரு நொடியும்
                   எனக்குள் 
                   பூத்துக்கொண்டிருக்கிறாய்

  
                   எட்டிய தொலைவுக்கு
                   தட்டிக்கொடுக்கவும்
                   எட்டும் இலக்குக்கு
                   முடுக்கிவிடவும்
                   என் பாதையின் ஓரம்
                   மைல்கற்கள் மேல்
                   ஈர முத்தங்களோடு
                   காத்துக்கிடக்கிறாய்

                   -0-

இடமாறு தோற்றச் சரி


பின்நகர்ந்து
கரைந்த நாட்களுக்குள்
தஞ்சம் புகுந்து
கடிதம் ஒன்று எழுத ஆசை
உறை பிரித்து வாசிக்கத்தான்
ஒருவரும் இல்லை

---><---

ஊழல் ஒருபோதும்
இடமாறுவதில்லை
நிகழ்த்துவதிலும்,
குற்றம்சாட்டுவதிலும்
கட்சிகள்தான்
இடம் மாறுகின்றன!


---><---

ஓடி ஒளிந்த பிறகு
ஒவ்வொருமுறையும்
மனதிற்குள் சுடுகிறது
தவறவிட்ட
மழைத்துளிகள்

---><---

அவசரச்சிகிச்சைக்கு
அளித்த
கீழ்சாதிக்காரனின்
இரத்தத்தில் மட்டும்
மறித்துப்போகிறது
தீட்டு அணுக்கள்

---><---

அனாதை விடுதிப்
பிள்ளைக்கு
விடுமுறை நாட்கள்
வலிய திணிக்கிறது
இல்லாத குடும்பம்
குறித்த ஏக்கத்தை

---><---

முடிவு செய்றது யார்?


கருஞ்சிறுத்தை காட்டெருமை
கவரிமான் யானை பூனை
புணர்ந்து புள்ளகுட்டி போட்டு
தனதாய் வாழ்ந்த பூமியை
தகரத்தில் தப்பட்டையடித்து தீமூட்டி
ஓடவிரட்டி ஒருவழியாய்க் கைப்பற்றி

செடிகளைச் சிதைத்து
மரங்களை முறித்து
வெட்டித்தோண்டி
பெயர்த்துப்புரட்டி
மேடுபள்ளம் நிரவி
எல்லைக்கல் நிறுத்தி
எங்களுக்கென்று பூமி சமைத்து
இத்தனைகாலம் பொழச்சாச்சு…

தாத்தன் காலத்தில் கூடாரம்போட்டு
அப்பன் காலத்தில் குடிசைகள்கட்டி
கடைசியாய் காசு சேர்த்து கடனோடு
கான்கிரீட்டில் வீடுகட்டி நிமிர்ந்தபோது
ஏதோ தாது இருக்குன்னு
இன்னொரு நாட்டு பல(ண)சாலிக்கு
இளிச்சிக்கிட்டே கொடுத்துச்சு அரசாங்கம்
 
எங்கள் நிலங்களை விட்டோட
ஓராயிரம் காரணங்கள் இல்லை
ஓடுன ஒரு சினை மானோ
கதறலோடு கருகிய காட்டெருமையோ
ஒரு சொல்லில் உதிர்த்த
ஒற்றைச் சாபமாகத்தான் இருக்கும்..

எல்லாச் சாபமும் இளைச்சவனுக்குத்தான்
என்பது மானுக்கும் பூனைக்கும் புரிய
அதுகளும் மனுசனாப் பொறக்கனுமே!

அடித்து விரட்ட கொஞ்சம் தகரங்களோடும்
கொளுத்திச் சிதைக்க தீப்பந்தங்களோடும்
இங்கிருந்து ஓடுகிறோம் உள்நாட்டு அகதிகளாய்

ஓடி நிற்கப்போவது பிறிதொரு காடா
இல்லை நாடான்னு முடிவு செய்றது யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக