அஃறிணை பேசுகிறேன்..
மழையோடு தன்னை
நிறம் மாற்றிக் கொள்ளும்
மண்ணுக்குத் தெரிந்திருக்கிறது
சேர்ந்து வாழ வேண்டும் என்று..
நிலத்தை விட்டுச் சென்றாலும்
மீண்டும் நிலத்தையே சேரும்
நீருக்குத் தெரிந்திருக்கிறது
நன்றி மறக்கக் கூடாது என்று..
தன்னோடு சேர்ந்த எதையும்
தனதாக்கும் தன்மைகொண்ட
நெருப்புக்குத் தெரிந்திருக்கிறது
அச்சமின்றி வாழவேண்டும் என்று..
இளம் தென்றலாகவும்
பெரும் புயலாகவும் வீசும்
காற்றுக்குத் தெரிந்திருக்கிறது
சாதிப் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று..
எங்கும் அலைந்து திரியும்
மேகங்களுக்குத் தெரிந்திருக்கிறது
இவ்வுலகில் எதுமே நிலையில்லாதது என்று..
பூத்துச் சிரிக்கும்
மலருக்குத் தெரிந்திருக்கிறது
இந்த மணித்துளி மீண்டும் வராது – அதனால்
வாழும்போதே சிரித்துக்கொள்ள வேண்டும் என்று..
ஊர்ந்து செல்லும் எறும்புக்குத்
தெரிந்திருக்கிறது..
சோம்பல் என்பது நம்மைச் சுற்றி
நாமே கட்டிக்கொள்ளும் கல்லறை என்று...
பறந்து திரியும் பறவைக்குத்
தெரிந்திருக்கிறது நேற்றைய உணவும்
நாளைய உணவும் இன்றைய பசியைத் தீர்க்காது என்று..
சண்டையிட்டாலும்
தன் கூட்டத்தைத் தேடும்
விலங்குகளுக்குத் தெரிந்திருக்கிறது
இனத்தோடு வாழவேண்டும் என்று..
எல்லாம் தெரிந்தாலும்
எதையுமே பின்பற்ற முடியாததால் இன்றுமுதல்
நான் அஃறிணை!!
சிந்திக்கத் தெரியாவிட்டாலும்
நிலம், நீர், தீ, காற்று, வான், தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள் ஆகியன இன்றுமுதல் என் இலக்கணப்படி உயர்திணைகள்!!
இப்ப சொல்லுங்க நீங்க
உயர்திணையா? அஃறிணையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக